Tuesday, April 17, 2012

எல்லோரையும் மன்னிக்கும் சீமானை யார் மன்னிப்பது?

எல்லோரையும் மன்னிக்கும் சீமானை யார் மன்னிப்பது?

நாம் தமிழர் கட்சியின் தலைவராக, தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் கனவோடு அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக, தமிழக மக்களின் நலனிற்காக உண்மையாக பாடுபடுவதாக சொல்லும் சமுதாய ‘போராளி’யாக, தமிழக மேடைகளில் முழங்கும் ‘கொள்கை வீரனாக’ சீமான் இருப்பதில் எனக்கு எவ்வித இடையூறும் இல்லை. ஆனால், தமிழீழத் தேசியத் தலைவரின் வீரத்தையும் ஆற்றலையும் தமிழீழ விடுதலைப் புலிகளினது தியாகத்தையும் தமிழீழ மக்களது உயிரழைப்பையும் மூலதனமாக தனது அரசியலுக்கு பயன்படுத்தும். ‘ச்சீ’மானை கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா?

முள்ளிவாய்க்காலை நோக்கி தமிழினம் செத்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தபொழுது தமிழக வீதிகளில் உணர்ச்சி பிழம்பாய் வெடித்து மேடைகளில் சொல்லாயுதம் ஏந்தி தமிழக மக்களுக்கு விழிப்பூட்ட தன்னால் ஆன உழைப்பை வழங்கிய சீமானை இன்றும் அனைவரும் மதிக்கிறோம்.

“நான் பெரியாரின் பேரன், கார்ல் மார்க்ஸின் மாணவன், பிரபாகரனின் தம்பி” என முழக்கமிட்டு பெரியாரியத்தையும் பொதுவுடமை சித்தாந்தத்தையும் எங்கள் தலைவனின் வீரத்தையும் தனது அழகு தமிழில் தமிழக மக்களுக்கு அறிவூட்டி மேடைகளில் பாடம் நடத்தினாரே, அந்த சீமான் மீது எங்களுக்கு இன்றும் கோபம் இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு பிறகு கட்சி தொடங்கி “நாம் தமிழர்” என பெயரிட்டு புலிக்கொடியின் இன்னொரு வடிவத்தை கொடியாக அறிவித்து தாய் தமிழக மக்களுக்கு உழைக்க வந்திருக்கிறோம் என புதிய இளைஞர் பட்டாளத்தோடு களம் இறங்கிய வேளையிலும் 2016-ல் எங்களது ஆட்சி அன்றிலிருந்துதான் தமிழக மக்களுக்கு நல்லாட்சி என முழுங்கிய வேளையிலும் சீமானை யாரும் தவறாக எண்ணவில்லை.

ஆனால் தொடர்ச்சியாக இயங்கிய வேளையில் தங்களது கொள்கைகளில் குழப்பமும் பிறரை மதியாத திமிர்த்தனமும் பிறரின் செயற்பாட்டுக்கு கூட ‘நாம் தமிழர்’ உரிமை கொண்டாடி அர்ப்பமாக புகழ் தேடிக்கிளம்பிய வேளையில்தான், சீமான் தமிழகத் தமிழர்கள் மத்தியில் கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறார்.

முத்துராமலிங்க தேவரை வணங்கிகொண்டு அதே தருவாயில் பெரியாரின் செயற்பாட்டை விமர்சிக்கத் தொடங்கியபொழுதுதான் முதல்முறையாக எங்களிடம் இருந்து அந்நியப்பட்டீர்கள் சீமான். இதனை கேள்வி கேட்டு எழுதிய பிரான்சு தமிழச்சியை எவ்வளவு இழிவான வார்த்தைகளில் வர்ணித்து உங்கள் தம்பிமார்களிடம் பேசினீர்கள் என்பதனை பலரும் அறிந்தே வைத்துள்ளோம்.

சேகுவாராவின் புகைப்படத்தை உங்கள் சட்டை மூலமாக நீங்கள் நெஞ்சில் தாங்கி தமிழக மேடைகளில் முழக்கமிட்டதை பார்த்து பெருமைபட்ட நாங்களேதான், அதே சேகுவாராவின் படத்தை தாங்கி நின்ற உங்களது மகிழுந்து தமிழக மதுக்கடைகளின் வாசலில் நின்றதை கண்டு வேதனைப்பட்டோம்.

2010 ஆம் ஆண்டு, இலங்கையில் நடக்கவிருந்த இந்தியத் திரைப்பட விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடுக்கவும் பல தமிழக அமைப்புகள் களம் இறங்கிய வேளையில், அதனை செய்தது அனைத்துமே ‘நாம் தமிழர்’ கட்சிதான் என சுய தம்பட்டம் அடித்த உங்கள் கூட்டத்தின் அர்ப்பத்தனத்தை இன்றும் யாரும் மறந்துவிடவில்லை.

பொதுவாக தமிழகத்தில் செயற்படும் தமிழின உணர்வு அமைப்புகள் செய்யும் சின்னச் சின்ன போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் பெரிதுபடுத்தி உரிமை கொண்டாடியதில்லை. சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் செய்த பல போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அவர்கள் ஒருபொழுதும் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை. நீங்கள் அக்கட்சியோடு சேர்ந்து இயங்கிய தருவாயில் அவர்கள் செய்த பல போராட்டங்களுக்கு உங்கள் பெயரை முத்திரை குத்திக்கொண்டதை கொளத்தூர் மணி அண்ணன் அவருக்கே உரிய பெருந்தன்மையில் மறக்கலாம் மன்னிக்கலாம், இல்லை கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அது தவறுதான் என்றோ இனி தொடரக்கூடாது என்றோ நீங்களோ உங்கள் அன்பு தம்பிமார்களோ உணர்ந்ததாக தெரியவில்லையே.

தலைவர் பிரபாகரனின் தம்பி என சுய புராணம் பாடும் நீங்கள் அவரது கொள்கை பிடிப்பை பற்றி படித்திருக்கிறீர்களா என்று கூட தெரியவில்லை.

இலங்கையில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்பவர்களின் படங்களை தமிழகத் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என அனைவரும் முடிவெடித்த வேளையில், ‘தம்பி’ சூர்யாவிற்காக விவேக் ஓபராய் நடித்த ரத்தச்சரித்திரம் படத்தை மன்னித்தீர்கள்.

ராஜபக்சேவோடு கை குலுக்கி தமிழனுக்கு எதிராய் நின்ற அசினை உங்கள் ‘தம்பி’ விஜய்க்காக மன்னித்து ‘காவல்காரன்’ படத்திற்கு எதிராக சின்ன கருத்தையும் சொல்லத் தயங்கினீர்கள்.

எந்த சல்மான்கான் இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறார் என எதிர்த்தோமோ அதே சல்மான்கான் தமிழ்த்திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு நிகழ்விற்கு வருகை தந்தபொழுதும் சிறிதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அன்றைய மேடையில் அவருடன் உங்கள் ‘அன்பு தம்பி’ விஜயும் இருந்ததுதான் காரணமா? என நீங்கள்தான் சொல்லவேண்டும்.

க்ரிஸ் உள்ளிட்ட பாடகர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்காக இலங்கைக்கு சென்று, அவ்வேளையில் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு உருவாகியதால் திரும்பினார்கள். அடுத்தநாள் ‘உச்சிதனை முகர்ந்தால்’ படப்பிடிப்பின்பொழுது நடிகை சங்கீதா உங்களிடம் புலம்பியபொழுது, “தம்பி க்ரிஸ் பற்றி எனக்கு தெரியாதா? அவருக்கு ஒரு பிரச்சனையும் வராமல் நான் பாத்துக்கொள்கிறேன். நீ கவலைப்படாதே” என ஆறுதல் கூறியதை நானும் உடன் இருந்து கேட்டேன். அப்பொழுதே கேட்க தோன்றியது, “எல்லோரையும் மன்னிக்க நீங்கள் யார்?” என.

தம்பி விஜயையும், தம்பி சூர்யாவையும், தம்பி க்ரிஸையும் மன்னித்துக்கொண்டே செல்லும் உங்களை யார்தான் மன்னிப்பது. இதுதான் நீங்கள் ஒப்பற்ற புரட்சியாளன் எங்கள் தலைவர் பிரபாகரனிடம் கற்றவைகளா? எங்கள் இனத்து தலைவனை உங்கள் அண்ணன் என உரிமை கொண்டாட உங்களுக்கு என்ன அருகைதை இருக்கிறது?.

உங்கள் பொய்களை மேடைகளில் மட்டுமே கேட்டுவந்த எனக்கு நேரடியாகவும் கேட்கும் வாய்ப்பும் ஓர் நாள் வந்தது.

‘உச்சிதனை முகர்ந்தால்’ படப்பிடிப்புன்பொழுது நான், நீங்கள், சத்தியராஜ் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது, “தலைவர் நேரடியாக சில பயிற்சிகளை தங்களுக்கு வழங்கியதாகவும் இராணுவ உடையில் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டதாகவும் ஆனால் உங்களுக்கு அப்படத்தை தலைவர் தராமல் விட்டுவிட்டார் எனவும் அது இவ்வேளையில் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பயன்பட்டிருக்கும் எனவும்’ நீங்கள் கூறியதை கேட்டு உங்கள் மேல் பரிதாபம்தான் வந்தது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஒரே ஆள் எங்கள் அண்ணன்தான் என உங்கள் ‘அன்பு தம்பி’மார்கள் பலரிடம் ரகசியமாக சொல்லி வருவதையும் அதனை கேட்டு பலர் சிரிப்பதையும் பிறகுதான் தெரிந்துகொண்டேன். உங்கள் தம்பிகள் முட்டாள்கள் என்பதற்காக தமிழகமே முட்டாள்கள் நிறைந்த பூமியாகவா அண்ணா இருக்கும்?

இதுகூட பரவாயில்லை. உங்களது சமீபத்திய நாம் தமிழர் செயல்வீரர் கூட்டத்தில் ஒரு பொய்யை வரைமுறை மீறி அவிழ்த்துவிட்டீர்களே, அதனை கேட்டு சிரிக்காத ஈழத்தமிழனே இல்லை.

“நான் தலைவரோடு சேர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தேன். எங்களோடு பொட்டுஅம்மான், தமிழேந்தி, நடசேன், காஸ்ட்ரோ உள்ளிட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். பொட்டு அம்மான் தலைவர் பார்த்து கேட்கிறார், தமிழகத்தில் அனைவரும் இருக்க சீமானை மட்டும் ஏன் தம்பி என அழைக்கிறீர்கள் என கேட்டதற்கு, இவன் ஒருவன் என் விடுதலை என் இனத்தின் விடுதலை என பேசுகிறான் என தலைவர் சொன்னார்” என சொன்னீர்கள் சீமான்.

நீங்கள் சொன்ன அனைவரும் எதாவது ஒரு நிகழ்வில் ஒன்றாக ஓர் இடத்திற்கு வந்திருக்கலாமேயன்றி உங்களுடன் உணவருந்த ஓர் இடத்திற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. மற்றவர்கள் வந்திருந்தாலும் காஸ்ரோவும் பொட்டு அம்மானும் அங்கே வந்திருக்க துளியும் வாய்ப்பில்லை.

வழக்கமாக நீங்கள் சொல்லும், “தலைவனுடன் வன்னிக்காட்டிலே நடந்துகொண்டிருந்த பொழுது”, “என் தலைவன் என் கையைப் பற்றி சொன்னார்” போன்ற வசனங்களுடன் சொல்லும் திரைக்கதையைவிட இது மிகவும் அபத்தமாகவும் அறிவுக்கு புறம்பானதாகவும் இருந்ததும் உங்கள் தம்பிமார்கள் சிந்திக்கவேயில்லையே.! இதனை கேட்டு உங்கள் தம்பிமார்கள் கைதட்டுகிறார்கள். இவ்வளவு அடிமுட்டாள்களையா உங்கள் நிர்வாகிகளாக வைத்துள்ளீர்கள்?

உங்கள் ஒவ்வொரு மேடையிலும் நீங்கள் தலைவருடன் பேசியதாக சொல்லும் பொய் மூட்டைகளை ஒன்று சேர்த்தால் பல மணிநேர உரையாடல் ஆகுமே!

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தமிழகத்தில் நீங்கள் மட்டும் தம்பி இல்லை. “நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி” உள்ளிட்ட பல அண்ணன்களும் உண்டு. அவர்கள் நீங்கள் கூறுவது போல “நான் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது” என ‘உண்மை நிகழ்வுகளை’ மட்டும் சொல்ல ஆரம்பித்தாலே பல புத்தகங்கள் எழுதலாம்.

வாய் திறந்தாலே பொய் பேசும் உங்களை நம்பி எப்படி தமிழினம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? உங்கள் அரசியல் பிழைப்பிற்காக என்னவேண்டுமானாலும் பொய்யுரை ஆற்றுங்கள் அதனை நம்பும் முட்டாள்கள் உங்கள் பின் அணிவகுக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. மாவீரர்களின் தியாகத்தையும் புலிகளின் வீரத்தையும் எங்கள் தலைவரின் பெயரையும் சொல்லி பொய் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் அமைப்புகளிடமும் நீங்கள் அடிக்கும் கூத்தை பலர் வருத்தப்பட்டும் ஆதங்கப்பட்டும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பைச் சார்ந்த ஒருவர் உங்களை தமிழகத்தில் வந்து சந்தித்த தருவாயில் நீங்கள் கட்சி வளர்ச்சிக்கு பணம் கேட்டீர்கள். அவர் அதற்கு நிகழ்காலத்தில் நடந்துவரும் அரசியல் போராட்டங்களுக்கே போதிய நிதியில்லை என சொன்னபொழுது, “இறுதி யுத்த நேரத்தில் சேர்த்த பணம் என்னாயிற்று? புலிகள் பணத்தை என்ன செய்தீர்கள்?” என கேட்டதாக மிகவும் ஆதங்கப்பட்டு என்னிடம் கூறினார். தமிழகத் தமிழர்கள் நமக்கு அவர்களிடம் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது அண்ணா?

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு வைகோ ஐயா அவர்களை ஈழத்தமிழர்கள் உரை நிகழ்த்த அழைத்தபொழுதும் அதன்பின்னரும் வைகோ ஐயாவை பற்றி புலம்பெயர் அமைப்பினர்களிடமும் மக்களிடமும் எவ்வளவு தரம்தாழ்ந்த விமர்சனைங்களை வைத்தீர்கள் என எனக்கு தெரியும். அதுமட்டுமா? அடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்பொழுது கட்டாயமாக வைகோவை அழைக்கக் கூடாது எனவும் உங்களைதான் அழைக்கவேண்டும் எனவும் நீங்கள் கேட்டவைகளும் தெரியும். நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதனை உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் தீர்மானிக்குமே தவிர உங்கள் பொய் பேசும் மேடைகள் அல்ல.

“தமிழகத் தலைவர்களான ஐயா நெடுமாறன் அவர்களையும் ஐயா வைகோ அவர்களையும் தோற்றுப்போனத் தலைவர்கள் என்றும் அந்த வயதான தலைவர்களை ஒன்றுக்கும் உதவாத தலைவர்களை ஏன் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்னுடன் வாருங்கள்” என்று தமிழகத்தில் மூத்த உணர்வாளர் ஒருவருக்கு நீங்கள் வலை வீசினீர்கள். இதனை உங்கள் அருகில் நின்றுகொண்டு கேட்டவன் நான். அவர்களை கீழ்த்தரமாக ஒருபக்கம் பேசிக்கொண்டு மேடைகளில் அண்ணன் என்றும் ஐயா என்றும் எப்படித்தான் உங்களால் சொல்ல முடிகிறதோ.

நீங்கள்தான் இயக்குநர் மட்டும் இல்லையே. சிறந்த நடிகரும் தானே!

No comments:

Post a Comment